January 6, 2020

கூடா ஒழுக்கம்


கூடா ஒழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.  271

கள்ள மனத்தினனது  தீயவொழுக்கத்தை, உடம்பாக அமைந்துள்ள பூதங்கள் ஐந்தும் கண்டு தமக்குள்ளே சிரிக்கும்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.            272

ஒருவன் மனம், அவனறிந்த குற்றத்தின் கண்படின், மிகவுயர்ந்த துறவுக்கோலம் யாது பயனைத் தரும்?

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.      273

மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலியில்லாத நிலைமையை யுடையவனது வலியுடையார் போன்ற தவக்கோலம், மாடு புலித் தோலைப் போர்த்துப் பயிர் மேய்வது போலாகும்.

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.           274

ஒருவன் தவக்கோலத்தில் மறைந்து நின்று கூடாவொழுக்கம் ஒழுகுதல், வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிப்பது போன்றது.

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம்  எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்.       275

யாம் ஆசையற்றோம் என்பவரது பொய்யயாழுக்கம், பிறர் கண்டு பழித்து வருந்தினால்என் செய்தோம், என் செய்தோம்என்று இரங்குமாறு துன்பம் பலவும்தரும்.

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.           276

மனத்தில் பற்றறாது, துறந்தவரைப் போலப் பிறரை ஏமாற்றி வாழ்வாரைப் போல கொடியவர் இல்லை.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.     277

புறத்தே குன்றிமணியின் நிறம் போன்ற தூய தவக்கோல முடையராயிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராய் இருப்பாரை இவ்வுலகம் உடையது.

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி
மறைந்துஒழுகும் மாந்தர் பலர்.       278

குற்றம் மனத்தின்கண் இருக்க, பெரியார்களின் தன்மையைப் பூண்டு, தீய வழிகளில் மறைந்தொழுகும் மாந்தர் பலர் உலகத்தில் உள்ளனர்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்குஅன்ன
வினைபடு பாலால் கொளல்.            279

அம்பு நேராக இருப்பினும் செயலால் கொடியது. யாழின் தண்டு வளைந்திருப்பினும் செயலால் செவ்விது. அவ்வாறே தவஞ் செய் வோரையும் கொடியர் செவ்வியர் என்பது அவர்களது வடிவால் கொள்ளாது அவர்கள் செய்யும் செயலின் பகுதியால் அறிந்து கொள்க.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.        280

உயர்ந்தோர் துறவறத்திற்காகாதெனக் குற்றங்கூறிய ஒழுக்கத்தை நீக்கி விட்டால், தலைமயிரைச் சிரைத்தலும் வளர்த்தலும் வேண்டிய தில்லை. 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...