January 6, 2020

சிற்றினம் சேராமை


சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.         451

பெரியார், சிற்றினத்தைச் சேர அஞ்சுவார்கள். சிறியோர் அதைச் சுற்றமாகக் கொள்வர்.

நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும்  மாந்தர்க்கு
இனத்தியல்பு அதுஆகும் அறிவு.      452

மக்களுக்குத் தாஞ்சேர்ந்த இனத்தின் தன்மையதாகும் அறிவானது, நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறுபடுவதை ஒக்கும்.

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். 453

மக்களுக்குப் பொது அறிவு மனத்தினால் உண்டாகும். உலகத்தாரால் இத்தகையன் என்று சொல்லப்படும் சொல்லானது இனத்தினால் உண்டாகும்.

மனத்துஉளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு.  454

அச்சிறப்பறிவு, ஒருவனுக்கு மனத்தில் உள்ளது போலத் தன்னைக் காட்டி, அவன் சேர்ந்த இனத்தினால் உண்டாகும்.

மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும். 455

மனம் தூய்மை, செய்யும் வினை தூய்மை ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையைத் துணையாகக் கொண்டு வரும்.

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. 456

மனம் தூய்மையானவர்களுக்குப் பின்பு எஞ்சி நிற்கும் பொருள்கள் முதலியன நல்லனவாகும். இனம் தூய்மையானவர்க்கு நன்றாகத செயல் எதுவுமில்லை.

மனநலம் மன்ஊயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். 457

மக்களுக்கு மனத்தின்கண் உள்ள நலம் செல்வமாகும். இனத்தினது நலம் அம் மனநலத்தோடு எல்லாப் புகழையும் தரும்.

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. 458

மனநலம் நன்குடையவராயினும், அறிவாளிகட்கு இனநலம் அதற்குக் காவலாதல் உடையது. மனநலத்தினும் இனநலம் சிறந்தது.

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.     459

மனநலத்தினால் மறுமையின்பம் உண்டாகும். அதற்கு அச் சிறப்பும் இனநலத்தினால் வலிபெறும்.

நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.    460

ஒருவனுக்கு நல்ல இனத்தைப் பார்க்கினும் மிக்க துணையும் இல்லை. தீய இனத்தைப் பார்க்கினும் துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை. இனம்: இனச்சேர்க்கை.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...