மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 941
உணவும் செயலும் ஒருவன் உடம்பின் பகுதிக்கு ஒத்த அளவன்றி அவ்வளவில் மிகுமாயினும் குறையுமாயினும், மருத்துவ நூலோர் வாதம் பித்தம் கவம் என எண்ணிய மூன்றும் அவனுக்குத் துன்பஞ் செய்யும்.
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 942
ஒருவன் முன்னுண்ட உணவு அற்றதைத் தெளிவாக அறிந்து பின் உண்பானாயின், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டிய தில்லை.
அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான நெடிதுஉய்க்கும் ஆறு. 943
முன்னுண்டது அற்றால் பின் அறும் அளவு தெரிந்து உண்ண வேண்டும். அது உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழியாகும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. 944
முன்னுண்டது அற்றதை அறிந்து, பின் மிகப் பசித்து, உண்ணும் போது, மாறு கொள்ளாத உணவுகளைப் பிடித்து உண்ண வேண்டும்.
மாறுபாடு இல்லாத உணவு மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945
அம்மூவகை மாறுபாடுமில்லாத உணவை மனம் விரும்பிய அளவன்றிப் பிணிவாராத அளவு ஒருவன் உண்பானாயின், அவன் உயிர்க்கு நோய்களால் துன்பம் உண்டாதல் இல்லை.
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். 946
உண்ணும் அளவில் சிறிது குறைய உண்பது நன்றென அறிந்து அவ்வாறே உண்பவனிடம் இன்பம் நீங்காது நிற்பது போல, மிகப் பெரிய உணவை உண்பவனிடம் நோய் நீங்காது நிற்கும்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோய்அள வின்றிப் படும். 947
ஒருவன் தன் உடல்நிலைக்கேற்ற உணவையும் காலத்தையும் ஆராயாது வேண்டிய உணவை வேண்டிய போது வயிற்றுத் தீயின் அளவல்லாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய்கள் அள வின்றி வளரும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948
ஒரு நோயாளியின் நோயை அதன் குறிகளால் இன்ன தென்று அறிந்து, பின் அந்நோய் வந்ததன் காரணத்தை அறிந்து, பின் அந்நோயைத் தீர்க்கும் வழியை அறிந்து, அவ்வழியில் தப்பாமல் மருத்துவம் செய்க.
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். 949
மருத்துவ நூலைக் கற்றவன், நோயாளியின் அளவையும், நோயின் அளவையும், மருத்துவஞ் செய்யதற்கேற்ற காலத்தையும் நன்கு எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து. 950
பிணிக்கு மருந்தாவது, நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருத்துவம் தப்பாமல் செய்பவன் என்ற அந்நான்கு பிரிவு களையுடய நான்கு கூறுகளையுடையது.
No comments:
Post a Comment