புல்லறிவாண்மை
அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு. 841
வறுமையுள் மிக்க வறுமையாவது, அறிவில்லாமையாகும். ஏனைப் பொருளில்லாமையை வறுமையாகக் கொள்ள மாட்டார் உலகத்தார்.
அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம். 842
புல்லறிவுடையான் மனமுவந்து ஒரு பொருளை ஒருவனுக்குக் கொடுத்ததற்குக் காரணம், வேறொன்றும் இல்லை. அது பெறு கின்றவனுடைய தவமேயாகும்.
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. 843
புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்பப்படுத்திக் கொள்ளும்
துன்பமானது, அத்துன்பஞ் செய்வதற்குரிய பகைவர்க்கும் அரிது.
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. 844
புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையோம் என்று சொல்லிக் கொள்ளும் மயக்கமாம்.
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும். 845
புல்லறிவாளர் தாம் கல்லாதனவற்றையும் கற்றவர் போலக் காட்டிக் கொண்டு நடத்தலானது, குற்றமறக் கற்ற நூலிடத்தும் பிறர்க்கு ஐயத்தை உண்டாக்கும்.
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. 846
புல்லறிவாளர் தம்மிடம் உள்ள குற்றங்களை நீக்காராயின், ஆடையால் மறைத்தற்குரிய உறுப்பை மறைத்தவராகத் தம்மை கருதுதலும் புல்லறிவாகும்.
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 847
அரிய மறைபொருள்களை வெளியிடும் புல்லறிவாளன், தானே தனக்குப் பெரிதும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
ஏவவும் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர்
போஓம் அளவும்ஓர் நோய். 848
புல்லறிவாளன் தனக்கு உறுதியாயினவற்றை அறிவுடையோர் செய்யயன்று சொன்னாலும் செய்ய மாட்டான். அதுவன்றித் தானாகவும் இவை நல்லவை என்று அறியமாட்டான். அவன் சாகமட்டும் உலகிற்கு ஒரு நோய் போல்வான்.
காணாதற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. 849
தன்னை எல்லாமறிந்தவனாக மதித்தலால், ஒன்றுமறியாத
புல்லறிவாளனுக்கு ஒன்றை அறிவிக்கப் புகுந்தவன், அவனால் பழிக்கப்பட்டுத் தான் அறியாதவனாவான். இனி, அவ்வறியுந் தன்மையில்லாதவன் கொண்டது விடாமையால், தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தவனாவான்.
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். 850
உயர்ந்தோர் பலரும் உண்டென்பதை இல்லையயன்று சொல்லும் புல்லறிவாளன், இவ்வுலகின் கண்ணே திரியும் பேய் என்று எண்ணப் படுவான்.
No comments:
Post a Comment