January 6, 2020

நீத்தார் பெருமை


நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.  21

நூல்களது துணிவு, நல்லொழுக்கத்தில் நின்று தீய ஒழுக்கங்களைத் துறந்தாரது பெருமையையே எல்லாப் பெருமைகளிலும் மேலாக விரும்பும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.          22

துறந்தவர்கள் பெருமைக்கு அளவு கூறின், அது உலகத்தில் இறந்தவர்களை இத்தனைபேர் என்று எண்ணியறிவது போன்றது.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23

நன்மை தீமைகளின் பாகுபாடுகளை நன்கு அறிந்து, மிக்க அறத்தைக் கைக்கொண்டவர் பெருமையே உலகில் சிறந்தது.

உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.        24

அறிவு என்னும் குத்துக்கோலால், பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் புலன்கள் மேற்செல்லாமல் காப்பவன், துறவறம் என்னும் சிறந்த நிலத்திற்கு ஒப்பற்ற விதையாவான்.

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு   ளார்கோமான்
இந்திறனே சாலும் கரி. 25

ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு, அகன்ற வானுலகத்தார்க்குத் தலைவனாகிய இந்திரன் வரலாறே தக்க சான்றாகும்.

செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்.          26

செய்தற்கு அரியனவாகிய செயல்களைச் செய்பவர் பெரியார், செய்தற்கு அரியனவாகிய செயல்களைச் செய்யாதவர் சிறியார்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.         27

உலகியலானது, சுவை முதலிய ஐம்புலன்களின் வகையை ஆராய்பவனிடத்தே அமைந்துள்ளது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.     28

நீத்தார் பெருமையை, உலகில் அவர்கள் மறைமொழிகளே காட்டிவிடும்.

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.    29

நிறைந்த குணமுடையார்க்கு உண்டாகும் சினம், நொடிப் பொழுதுதான் நிற்குமெனினும் தடுத்தல் அரிதாகும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.   30

எல்லா உயிர்களிடத்தும் அருளுடையவராய் நடந்து கொள் வதால், அந்தணர் என்போர் துறவிகளே யாவர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...