January 3, 2020

அவர்வயின் விதும்பல்


அவர்வயின் விதும்பல்

வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.  1261

அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன. அதுவேயன்றி, கண்களும் அவர் வரவைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து புல்லியவாயின. இவ்வாறையும் அவர் வரவில்லை.    
 
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. 1262

விளங்குகின்ற அணிகலன்களை உடையவளே, காதலரை இன்று யான் மறப்பேனாயின், என் மெல்லிய தோள்கள் தம் அழகை நீக்கி வளையல்களைக் கழல விடும். ஆகவே, என்னால் மறக்க முடிய வில்லை என்பதாம். 
     
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.        1263

வெற்றியை விரும்பித் தமது ஊக்கமே துணையாகச் சென்றவர், திரும்பி வருதலை விரும்பி இன்னும் யான் உயிருடன் இருக்கிறேன். அவ்விருப்பத்தால் உயிர் வாழ்கிறேன். அஃதில்லையாயின் இறந்து விடுவேன் என்பதாம்.       

கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.        1264

நம்மைவிட்டுப் பிரிந்து போனவர் மிக்க காமத்துடன் நம்மிடம் வருதலை நினைந்து, என் நெஞ்சம் மரக்கிளை மேல் ஏறிப் பார்க்கின்றது.
      
காண்கமன் கொண்கனைத் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.        1265

எனது கணவனை யான் கண்ணாரக் காண்பேனாக. கண்ட பிறகு என் மெல்லிய தோள்களின் பசலை நிறம் தானே நீங்கிவிடும். 
    
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.            1266

இவ்வளவு நாளாய் வராத என் கணவன் ஒரு நாள் வருவானாக. வந்தால், துன்பம் செய்கின்ற இந்நோய் அனைத்தும் கெட அவனை மெய்வாய் கண்மூக்குச் செவி என்னும் ஐந்தாலும் பருகுவேன்.  
    
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.     1267

கண்போன்ற தலைவர் வருவாராயின், அவர் வராது நீட்டித் தமைக்காகப் புலப்பேனா? அல்லது அவரைக் கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது புலத்தல் புல்லுதல் என்னும் இரு செயல்களையும் ஒன்றாகக் கலப்பேனோ? யாது செய்வேன்?      

வினைகலந்து வென்றுஈக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.      1268

வேந்தன் போர் செய்து வெல்வானாக. யானும் மனைவியுமாக மாலைப் பொழுதுக்கு விருந்து நடத்துவோமாக.      
 
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.    1269

நெடுந்தொலைவு சென்ற தலைவர் திரும்பி வரும் நாளைக் குறித்து வருந்தும் மகளிர்க்கு, ஒருநாள், பலநாள் போல நெடிதாகச் செல்லும்.  
    
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்  உறின்என்னாம்
உள்ளம் உடைத்துஉக்கக் கால்.         1270

காதலி நம் பிரிவை ஆற்றாது உள்ளம் உடைந்து இறந்து போனால், நம்மை அவள் பெறக் கூடியவள் ஆனாலென்ன? அல்லது பெற்றால்தான் என்ன? அன்றி மெய்யுறக் கலந்தால்தான் பயனென்ன? இவை ஒன்றாலும் பயனில்லை. அதற்கு முன் யான் செல்ல வேண்டும் என்பது கருத்து.       

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...