January 6, 2020

கூடா நட்பு


கூடா நட்பு

சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.    821

மனத்தால் கூடாதிருந்தே தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் வரையில் கூடியிருப்பவர் நட்பானது, வாய்ப்புக் கிடைத்தால் இரும்பு முதலியவற்றைத் துண்டாக வெட்டுதற்குத் துணை செய்யும் பட்டடைக்கு ஒப்பாகும்.  

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.         822

நட்பினர் போன்று நட்பில்லாதவருடைய நட்பானது, பொது மகளிர் மனம் போல வேறுபடும்.  

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.   823

நல்ல நூல்கள் பலவற்றைக் கற்ற போதிலும், அதனால் மனந்திருந்தி நண்பராகுதல் பகைவர்க்கு இல்லை.  

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும்.           824

கண்ட பொழுது முகத்தால் இனிமையாகச் சிரித்து எப்போழுதும் மனத்தால் கேடு செய்ய நினைக்கும் வஞ்சகர்களை, அஞ்ச வேண்டும்.  

மனத்தின் அமைய தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறல்பாற் றன்று.   825

மனத்தால் தம்மொடு பொருந்தாதவர்களை, அவர் சொல்லைக் கொண்டு யாதொரு செயலினும் தெளிதற்பால தன்று.  

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.            826

நண்பர் போல நல்லவைகளைச் சொன்னாராயினும், பகைவர் சொல்லும் சொற்கள் நன்மை தராமை விரைவில் அறியப்படும். தீமை தரும் என்பதாம். 
 
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க   வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.          827

வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலிருந்து பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் நமக்கு நன்மை செய்தலைக் குறித்ததென்று கொள்ளாதொழிக.  
 
தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.           828

பகைவர்களது வணங்கும் கையினுள்ளும் படைக்கலம் மறைந் திருக்கும். அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அப்படை மறைந் திருக்கும் இடமாகும்.
  
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.           829

பகைமை தோன்றாமல் புறத்தே நட்பினை மிகச் செய்து அகத்தை தம்மை இகழும் பகைவரை, தாமும் அவ்வாறே புறத்தே அந்நட்பினை மிகச் செய்து அகத்தே அது சாகும்படி பொருந்தும் பான்மை உடையது முறையாகும்.   

பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.  830

தம் பகைவர் தமக்கு நண்பராக நடக்கும் காலம் வந்தால்,  தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அந்நட்பை விலக்கிப் பின் அம்முக நட்பையும் விட்டுவிட வேண்டும்.   


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...