January 6, 2020

ஈகை


ஈகை

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியயதிர்ப்பு நீரது உடைத்து.          221

இல்லாதவர்க்கு ஒன்றைக் கொடுப்பதே கொடை. மற்றவர்க்குக் கொடுப்பன வெல்லாம் குறியயதிர்ப்புத் தன்மையை யுடையது. குறியயதிர்ப்புஅளந்து வாங்கி அவ்வளவே கொடுப்பது.

நல்ஆறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்எனினும் ஈதலே நன்று.   222

ஒருவனிடமிருந்து ஒரு பொருளைக் கொள்ளுதல் நல்வழி என்றாலும் அது தீதாகும். கொடுத்தால் மேலுலகில் மதிப்பு இல்லை என்றாலும் கொடுத்தல் நல்லது. 

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.     223

இரப்பவரிடம்நான் இலன்என்னும் துன்ப மொழியைக் கூறாது கொடுத்தல், குடிப் பிறந்தானிடமே உள்ளது.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.      224

ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் அவர்க்குண்டாகிய இனிய முகத்தைக் காணும் வரையில், இரத்தலேயின்றி, இரக்கப் படுதலும் இனிதன்று.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.  225

நோன்பு நோற்பார்க்கு வலியாவது பசியைப் பொறுத்தல். அவ்வலிதான், பொறுத்தற்கரிய பசியை ஈகையால் நீக்குவாரது வலிக்குப் பின்பு.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.           226

பொருள் அற்றவரது மிக்க பசியைத் தீர்க்கக்கடவன். அது பொருள் பெற்றவன் ஒருவன் அப்பொருளை வைக்கும் இடமாகும்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.          227

பங்கீட்டு உண்ணுதலைப் பழகியவனை, பசி என்னும் தீயநோய் தீண்டுதல் இல்லை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்.       228

தமது பொருளைக் கொடாது வைத்துப் பின் இழக்கின்ற அருளி லாதார், பிறர்க்கு கொடுத்து அதனால் அவர்க்குண்டாகும் முக மலர்ச்சியினால் தாம் அடையும் இன்பத்தைக் கண்டறியரோ?

இரத்தலின் இன்னாது மன்ற நிரம்பிய
தாமே தமியர் உணல்.    229

தேடிய பொருளைத் தாமே தமியராக உண்ணல், உறுதியாக இரத்தலைக் காட்டிலும் கொடியது.

சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை.            230

இறப்பதைக் காட்டிலும் துன்பந்தருவதொன்றில்லை. பிறர்க்குக் கொடுக்க முடியாதவிடத்து அச்சாதலும் இன்பந் தருவதாகும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...