தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 511
நன்மை பயக்கும் வினையையும் தீமை பயக்கும் வினையையும் ஆராய்ந்து, நன்மையை விரும்பிய இயல்புடையான் சிறந்த வினைகளுக்கு அமர்த்தப்படுவான்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. 512
பொருள் வரும் வழிகளைப் பெருக்கி, அதனால் பொருள் வளத்தை உண்டாக்கி, அப்பொருள் வரும் வழிகட்கு பொருட்கும் உற்ற இடை யூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன் தொழில் செய்க.
அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. 513
அன்பு, அறிவு, ஆராய்ந்து துணிதல், பேராசையின்மை ஆகிய இந்நான்கையும், நிலையாக உடையவனிடமே தெளிவு வேண்டும்.
எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறாகும் மாந்தர் பலர். 514
எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்தும், செய்யும் செயலின் வகையினால் மனம் வேறுபடும் மக்கள் உலகில் பலராவார்.
அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று. 515
தொழிலானது செய்யும் வழிகளை அறிந்து வருந் துன்பங்களைப் பொறுத்துச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று ஒருவனை ஏவும் தன்மையது அன்று.
செய்வானை நாடி வினைநாடி காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 516
தொழில் செய்பவனது தன்மையை ஆராய்ந்து, அத்தொழில் முடிவு பெறுங் காலத்தோடு பொருந்த அறிந்து அத் தொழிலைச் செய்யக் கடவன்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 517
இச் செயலை இக்கருவியால் இத்தகையவன் முடிப்பான் என்று ஆராய்ந்து, அச்செயலை அவனிடம் விடுக.
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரியவன் ஆகச் செயல். 518
ஒருவனை ஒரு தொழில் செய்வதற்கு உரியவனாக ஆராய்ந்து தெளிந்த பிறகு, அவனை அத்தொழிற்கு உரிமையுடையவனாகச் செய்ய வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் தீரு. 519
எப்பொழுதும் தன் தொழிலின்கண் முயற்சியுடையவனது நட்பை, வேறுபாடாக நினைப்பவனை விட்டுச் செல்வம் நீங்கிவிடும்.
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. 520
தொழில் செய்பவன் கோணாதிருக்க உலகமும் கோணாது. ஆதலால், மன்னவன் தன் தொழிலை நாடோறும் ஆராயக் கடவன்.
No comments:
Post a Comment