பிறன்இல் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 141
பிறனுக்கு உரிமையானவளை விரும்பி நடக்கின்ற அறியாமை, உலகத்தில் அறத்தையும் பொருளையும் அறிந்தவரிடம் இல்லை.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142
தீமையின்கண் நின்றவர் எல்லாருள்ளும், பிறனது மனையாளை விரும்பி அவன் வீட்டு வாயிலில் நின்றவர் போல அறிவிலிகள் இல்லை.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார். 143
தம்மை நல்லவர் என்று நம்பினவர் வீட்டில் தீமை செய்தலை விரும்பி நடப்பார், இறந்தவரினும் வேறாகார்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல். 144
தினையளவுகூடத் தம் பிழையை எண்ணிப்பாராது பிறனுடைய மனையின்கட் புகுதல், எவ்வளவு பெருமையுடையோராயினும் யாதாகும்?
எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145
அடைதல் எளிதென எண்ணிப் பிறனில் விழைவான், எந்நாளும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். 146
பிறனில் விழைவானிடத்து, பகை, தீமை, அச்சம், பழி என்னும் நான்கும் எப்போதும் நீங்காவாம்.
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்
பெண்மை நயவா தவன். 147
அறநெறிப்படி இல்வாழ்பவன் என்று சொல்லப்படுவன், பிறனுக் குரியவளது பெண்மையை விரும்பாதவனாவான்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. 148
பிறன் மனையாளை மனத்தாலும் எண்ணாத பெரிய ஆண்மை. அறிஞர்களுக்கு அறிவுமட்டுமா? சிறந்த ஒழுக்கமும் ஆகும்.
நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார். 149
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில், நன்மை எய்துதற்குத் தகுதியானவர் யார் என்றால், பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதாராவர்.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 150
அறத்தைச் செய்யாது அறமல்லாதவற்றைச் செய்யினும், பிறன் எல்லையில் நிற்பவளது பெண்மையை விரும்பாமை நல்லது.
No comments:
Post a Comment