January 6, 2020

தெரிந்து செயல்வகை


தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.     461

ஒரு வினை செய்து முடித்தற்கு அப்போது செலவாகும் பொருளும், அவ்வினை செய்து முடித்தால் உண்டாகும் பொருளு மாகி, அவ்வினையால் பிறகு உண்டாகும் ஊதியமும் ஆகிய இம் மூன்றனையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச்  செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.  462

தாம் ஆராய்ந்து கொண்ட இனத்துடனே செய்யும் வினையை ஆராய்ந்து, பின் தாமும் எண்ணிச் செய்பவர்களுக்கு, பெற முடியாத பொருள் யாதொன்றும் இல்லை.   

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.          463

இனி உண்டாகக் கூடிய ஊதியத்தை எண்ணி, முன்புள்ள முதலையும் இழக்கும் செயலை, அறிவுடையோர் செய்ய முயல மாட்டார். 

தெளிவுஇல் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.   464

தமக்கு இகழ்ச்சி என்னும் குற்றத்திற்கு அஞ்சுபவர், ஆராய்த லில்லாத செயலைத் தொடங்க மாட்டார். 

வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.       465

சென்றால் உண்டாகும் வகையை நன்கு எண்ணிப் பாராது அரசன் போர்க்கு எழுதல், பகைவராகிய பயிரை வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்வதாகிய ஒரு வழியாம்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.  466

ஒருவன் செய்யத் தகாதவற்றைச் செய்தாலும் கெடுவான். செய்யத் தக்கவற்றைச் செய்யாமையாலும் கெடுவான்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.            467

செய்யத்தக்க செயலையும் எண்ணித் தொடங்குக. தொடங்கிய பின் எண்ணுவம் என்பது குற்றமாகும். 

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். 468

வினைமுடியும் வழியில் முயலாத முயற்சியானது, பலர் நின்று குற்றம் வராது காப்பினும் குற்றப்படும்.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.           469

அவரவருடைய இயல்பை அறிந்து, அதற்குப் பொருந்த செய்யாத விடத்து, நன்கு செய்த விடத்தும் குற்ற முண்டாகும். 

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.         470

அரசர் தம் நிலைக்குப் பொருந்தாதவற்றைச் செய்வாராயின் உலகம் இகழும். ஆகையால், உலகம் இகழாதவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...