January 6, 2020

நாடு


நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு.                            731

தப்பாது விளையும் விளை நிலங்களும், பொது நலம் புரியும் சான்றோர்களும், குறையாத செல்வமுடையோரும் ஒன்று சேர்ந்ததே நாடாகும்.  

பெரும்பொருளால் பெட்டக்கது  ஆகிஅருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.                                732

நெல் விளைவால் விரும்பத்தக்கதாகி, கேடின்மையுடன் கூடி மிகுதியாக விளைவதே  நாடாகும்.

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு.                       733

இறையல்லாத அரசியல் செலவு பல ஒருங்கே தன்னிடத்து வருங்கால் அவற்றை தாங்கி, அதோடு தன் அரசற்கு இறைப் பொருள் முழு வதையும் கொடுக்கும் ஆற்றலுடையதே நாடாகும்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது  இயல்வது நாடு.                            734

நீங்காத நோயும், அயல் நாட்டிலிருந்து வந்து அழிவு செய்யும் பகையும் இன்றி, அமைந்ததே நாடாகும்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.                    735

மாறுபட்ட பல கூட்டமும் உடனுறைந்தே கெடுக்கும் உட்பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழிலையுடைய சிற்றரசும் இல்லாததே நாடாகும்.
 
கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை.                          736

பயிர் நோய் முதலியவற்றால் கெடுதலை அறியாததாய், ஓரிரு போகம் கெட்டதாயினும் வளங்குன்றாத நாட்டினை, எல்லா நாடு களிலும் முதன்மையான நாடென்று சொல்லுவர் அறிவுடையோர். 

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு.                    737

மேல்நீரும் கீழ்நீரும் ஆகிய இரண்டு நீரும், பயன்படும் மலையும், அம் மலையிலிருந்து வருகின்ற நீரும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
 
பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்இவ் வைந்து.                  738

நோயின்மையும் செல்வமும் விளைவும் இன்பமும் காவலுமாகிய இவ்வைந்தினையும், நாட்டிற்கு அழகு என்று சொல்வர் அறிவு டையோர். இவ்வாறு நாடு அழகுடன் அமைய வேண்டுமென்பது.

நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல
நாட வளந்தரும் நாடு.                                  739

வருந்தாமல் வளந்தரும் நாடுகளே நல்ல நாடுகள் என்று சொல்வர் அறிவுடையோர். வருந்த வளந்தரும் நாடுகள் நாடுகளாக மாட்டா.

ஆங்குஅமைவு  எய்தியக் கண்ணும் பயம்இன்றே
வேந்துஅமைவு இல்லாத நாடு.                     740

அரசனோடு பொருந்தாத நாடானது, மேற்கூறிய இலக்கணங் களால் நிறைந்திருப்பினும் பயனுடைய தன்று. 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...