January 6, 2020

வினைத்திட்பம்


வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.           661

மேற்கொண்ட செயலைத் தப்பாமல் முடித்ததற்குரிய வன்மை என்பது மன வன்மையேயாகும். மன வன்மை யயாழிந்தனவெல்லாம் அவ்வினை முடித்தற்குரிய வன்மையாகா.     

ஊறுஓரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.          662

நூல்களை ஆராய்ந்தறிந்த அறிவுடையோர் கொள்கை யாவது, தீய காரியங்களைச் செய்யாமையும், மேற்கொண்ட செயல் பழுது பட்டால் அதற்கு மனந்தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழியாகு மென்பர் அறிவோர்.
     
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை   இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.   663

செய்யுந் தொழிலை முடிவில் வெளிப்படும்படி முன் பெல்லாம் மறைவாகச் செய்வதே ஆண்மையாகும். இடையே அச் செயல் வெளிப்படுமாயின் நீங்கத துன்பத்தைக் கொடுக்கும்.    

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.           664

யாம் இத் தொழிலை இவ்வாறு செய்வோம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியவாகும். சொன்னபடி செய்தல் எவருக்கும் அரியவாகும்.   
 
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்.         665

எண்ணத்தால் சிறப்பெய்தி வினைசெய்தற்குரிய பிற இலக்கணங் களாலும் மாட்சிமைப் பட்டவர்களது வினைத் திட்பமானது, வேந்த னிடத்தில் உறுதலைச் செய்தலான் எல்லாராலும் நன்கு மதிக்கப்படும்.  
  
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.         666

வினை செய்ய எண்ணியவர் வினைத்திட்பம் உடையவ ரானால், எண்ணிய பொருளை எண்ணிய படியே அடைவர். எளிதின் எய்துவர் என்பதாம்.
     
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்  உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.          667

உருளுகின்ற பெரிய தேருக்கு அமைந்த சிறிய அச் சாணியைப் போல் உருவிற் சிறியராய்க் காரிய முடித்ததில் மிக்க வன்மை உடையவர்களை உலகம் உடையது. ஆகையால் அவர்களது வடிவத்தைக் கண்டு அவர்களை இகழாதிருக்க வேண்டும்.    

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.            668

மனந்தெளிந்து செய்யத் துணிந்த தொழிலினிடத்து, மனந் தளராமல் தாழ்ச்சியின்றிச் செய்ய வேண்டும்.    

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை.        669

முதலில் துன்பம் மிகுதியாக வரினும்,  முடிவில் இன்பந்தரக் கூடிய தொழிலை உறுதியுடையராய்ச் செய்க.   
 
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.     670

புலவர் குழந்தை: தொழில் வன்மையை விரும்பாதவரை, வேறு எல்லா வகைத் திண்மையும் பெருந்திய விடத்தும், உயர்ந்தோர் நன்கு மதிக்க மாட்டார்.     

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...