January 6, 2020

வினைத்தூய்மை


வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.     651

ஒருவனுக்குத் துணைவர்களது நன்மை செல்வத்தை மட்டும் கொடுக்கும். ஆனால், விçனியனது நன்மை அவன் விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கும்.    

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.    652

புகழையும் நன்மையையும் தராத தொழில்களை, எப்போதும் செய்யாதிருக்க வேண்டும்.   

ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னும் அவர்.          653

மேலாக உயரக் கடவோம் என்று எண்ணுபவர், புகழைக் கெடுக்கும் செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும்.
   
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குஅற்ற காட்சி யவர்.       654

தெளிவான அறிவினையுடையவர், துன்பத்தில் அகப் பட்டா லும் அது தீர்தற்பொருட்டுக் கெட்ட காரியங்களைச் செய்யார். 

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று.      655

யான் செய்தது எத்தகையது என்று பின் தானே நினைந்து வருந்தக் கூடிய செயல்களை ஒரு பொழுதும் செய்யாதிருக்க வேண்டும். ஒருக்கால் தவறி ஒருவன் செய்வானாயின், அதிலிருந்து அத்தகைய செயல் களைச் செய்யாதிருத்தல் நல்லது.    

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.  656

தன்னைப் பெற்ற தாயின் பசி நோயைக் கண்டாயினும், அறிவுடையோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும். 
   
பழிமலைந்த எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   657

தீய காரியங்கைச் செய்து அதனால் பழியை மேற்கொண்டு பெற்ற செல்வத்தை விட, பழியை மேற்கொள்ளாத சான்றோரது மிகுந்த வறுமையே மேலானதாகும்.    

கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.       658

அறிஞர்கள் செய்யத் தகாதவையயன விலக்கிய செயல் களைத் தாமும் விலக்கி விடாமல் செய்தவர்களுக்கு, அச்செயல்கள் முடிந் தாலும் பின் துன்பத்தையே கொடுக்கும்.     

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.     659

பிறர் அழுமாறு துன்புறுத்திக் கொண்ட பொருளெல்லாம் தான் அழுமாறு தன்னை விட்டுப் போய்விடும். நல்ல செயல்கள் முதலில் இழப்பைத் தரினும் பின்பு நன்மை பயக்கும்.     

சலத்தால் பொருள்செய்துஏ மார்த்தல் பசுமட்
கலந்துள்ளநீர் பெய்துஇரீஇ யற்று. 660

தீய செயல்களால் பொருள் தேடி அதைக் கொண்டு ஒருவன் தனக்குப் பாதுகாப்புச் செய்து கொள்ளல், பச்சை மண்ணாலாகிய கலத்தினுள் நீரை ஊற்றிக் காத்தலோ டொக்கும்.    


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...