படைச் செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்வீர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர். 771
பகைவர்களே! முன்பு என்னுடைய தலைவன் முன் எதிர்த்து நின்று அவனால் இறந்து நடுகல்லாயினார் பலராவார். ஆதலால் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டின், என்னுடைய தலைவன் எதிரில் போரேற்று நில்லாதீர்கள்.
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772
காட்டின்கண் ஓடும் முயலைத் தப்பாமல் எய்த அம்பை ஏந்துவதை விட, வெட்டவெளியில் நின்ற யானையை எறிந்து தப்பிய வேலை ஏந்துதல் நல்லது.
பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு. 773
பகைவர் மேல் கண்ணோடாது பொரும் வீரத்தை நூலோர் மிகுந்த ஆண்மையயன்று சொல்லுவர், பகைவர்க்கு ஒரு தாழ்வு நேர்ந்த போது, கண்ணோடி அகத்தாழ்வு தீர உதவுதலை அப்பேராண் மைக்குக் கூர்மை யயன்று சொல்வர்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். 774
தன் கையிலிருந்த வேலைத் தன்னை எதிர்த்த யானையின் மேல் எறிந்து, அடுத்து வருகின்ற மற்றொரு யானை மேல் எறிவதற்கு வேலைத் தேடிக் கொண்டு திரிகின்ற ஒரு வீரன், தன் மார்பில் தைத்திருந்த வேலைக் கண்டு பிடுங்கி வேல் கிடைத்தமைக்காக மகிழ்வான்.
விழித்தகண் வேல்கொண் டுஎறிய அழித்துஇமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. 775
பகைவரை வெகுண்டு நோக்கிய கண்ணை, அப்பகைவர் வேலால் எறிய அதற்கஞ்சிய முடித்தித் திறப்பாராயின், அதுவும் வீரர்க்குப் புறங்கொடுத்தலொ டொக்கும்.
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து. 776
ஒரு வீரணானவன் முன்சென்ற தன் வாழ்நாட்களை எடுத்தெண்ணி, அந்நாட்களில் விழுப்புண் படாத நாட்களை யயல்லாம் வீணாகக் கழிந்த நாட்களாக எண்ணி வைப்பான்.
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777
உலகத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி உயிர்வாழ்தலை விரும்பாத வீரர், வீரக்கழலைக் காலில் கட்டுதல் அழகுடையது.
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர். 778
போர் உற்றால் தம் உயிர்க்கு அஞ்சாது போர்க்குச் செல்லும் வீரர், தம் அரசன் போர் வேண்டாமென்று முனிந்தாலும் அவ்வீரம் குறையார்.
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர். 779
தாங்கூறிய வஞ்சினம் தப்பாமல் இருத்தற் பொருட்டுப் போருக்குச் சென்று சாவக் கூடிய வீரரை, அவ்வஞ்சினந் தப்பினா ரென்று சொல்லப் பழிப்பவர் யார்?
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க உடைத்து. 780
தம்மைக் காத்த அரசர் கண்களில் நீர் பெருகும்படி போர் செய்து சாக வல்லாராயின், அச்சாவு எல்லோராலும் இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடையது.
No comments:
Post a Comment