January 6, 2020

புகழ்


புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.   231

புகழுண்டாக வாழ்தலாவது கொடுத்தல். உயிர்கட்கு ஊதியம் அப்புகழல்லது இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம்  இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.        232

சொல்லுவார் சிறப்பித்துச் சொல்லுவனவெல்லாம், இரப்பார்க்கு ஒரு பொருளைக் கொடுப்பவர் மீது நிற்கும் புகழாம்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்.        233

பெரும்புகழ் அல்லாது, உலகத்தில் இணையின்றி அழியாது நிலைத்து நிற்பது வேறொன்றில்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.     234

நில முழுவதும் ஒருவன் நெடிய புகழைச் செய்வானாயின், வானுலகம் தேவர்களைப் போற்றாது.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.           235

புகழுடம்பிற்கு ஆக்கம் ஆகும் கேடும், புகழுடம்பு உளது ஆகும் சாவும், அறிவாளிகட்கல்லது பிறர்க்கு இல்லை. 

தோன்றுஇல் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.  236

மக்களாய்ப் பிறந்தால் புகழத்தக்க குணத்தோடு பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதவர் பிறத்தலினும் பிறவாமை நல்லது.

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். 237

தமக்குப் புகழுண்டாகும்படி வாழ மாட்டாதார், அது பற்றி பிறர் இகழ்ந்த விடத்து இவ்விகழ்ச்சி நம்மால் வந்ததென்று தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது எதற்காக? புகழ்பட வாழாதவர் பழிக்கப்படுவார்.

வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின். 238

புகழ் என்னும் எச்சத்தைப் பெறாவிட்டால், உலகத்தார்க் கெல்லாம் அதுவே பழிப்பாகும் என்பர் அறிவோர்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.       239

புகழடையாத உடம்பைச் சுமந்த நிலம், பழிப்பில்லாத வளப்பத்தை யுடைய விளைவு குறையும்.

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.          240

பழிப்பு நீங்க வாழ்பவரே உயிருடன் கூடி வாழ்பவர் ஆவர். புகழ் நீங்க வாழ்பவர் உயிருடன் இருப்பினும் வாழாதவராவர். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...