January 6, 2020

பெரியாரைத் துணைக்கோடல்


பெரியாரைத் துணைக்கோடல்

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.       441

அறத்தின் கூறுபாட்டை அறிந்து முதிர்ந்த அறிவுடையாரது நட்பை, கொள்ளும் வகையை ஆராய்ந்து அறிந்து கொள்க.

உற்றநோய் நீக்கி உறாவுமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.         442

தனக்கு உற்ற துன்பத்தை நீக்கி, அது பின்னும் உறாமல் முன்னறிந்து காக்கும் தன்மையரை, விரும்பித் துணையாகக் கொள்க.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.        443

பெரியோர்களை விரும்பித் தமக்கு துணையாகக் கொள்ளுதல், எல்லாவற்றிலும் அரியதாகும். பெரியாரைத் துணைக்கோடல் முதன்மையானதாகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.            444

தம்மைக் காட்டிலும் அறிவிற் பெரியவர்களைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல், எல்லா வலியிலும் முதன்மையானது.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.           445

அரசன் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு ஆட்சி புரிவதால் அமைச்சர்களை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளக் கடவன்.

தக்கார் இனத்தானாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.          446

பெரியாரைத் தனக்குத் துணையாகக் கொண்டு நடக்கவல்ல அரசனுக்கு, பகைவரால் செய்யப்படும் தீங்கு ஒன்றுமில்லை. 
  
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.     447

குற்றங் கண்டால் கண்டித்துரைக்கும் பெரியாரைத்  துணையாகக் கொண்டவரை, கெடுக்கும் பெருமையுடைய பகைவர் யார்? ஒருவருமில்லை.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். 448

இடித்துரைப்போரை இல்லாத காவலற்ற அரசன், தனக்கு பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.      449

முதற்பொருள் இல்லாத வணிகருக்கு ஊதியம் இல்லை. அதுபோல, தன்னைத் தாங்கும் துணையில்லார்க்கு நிலைத்து நிற்கும் நிலை இல்லை.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.   450

நல்லாரது நட்பை விட்டு விடுவது, பலருடன் பகை கொள்வதை விடப் பதின்மடங்கு தீமையையுடையதாகும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...