மெய்யுணர்தல்
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. 351
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று எண்ணும் மயக்க அறிவினையுடையவன், மாண்பில்லாத பிறப்பினன் ஆவான்.
இருள்நீக்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 352
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அவ்வறிவு, அறியாமையை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்.
ஐயத்தின் நீங்கத் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து. 353
ஐயத்தினின்றும் நீங்கி உண்மைப் பொருளை உணர்ந்தவர்க்கு, வையத்தைவிட வானம் பக்கத்தில் உள்ளது.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு. 354
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, ஐந்தாகிய அறிவை அடைந்த விடத்தும் ஒரு பயனுமில்லை.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
ஒரு பொருள் எவ்வாறு காணப்பட்டாலும், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பதே அறிவாகும்.
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. 356
புலவர் குழந்தை: இங்கு கற்று உண்மைப் பொருளை அறிந்தவர், திரும்பி இங்கு வராத துறவற நெறியை அடைவர்.
நெடுஞ்செழியன்: இவ்வுலகத்தில் கற்க வேண்டியவைகளை யயல்லாம் கற்று, உண்மைப் பொருளை நன்கு அறியக்கூடிய ஆற்றல்பெற்ற துறவியர், தாம் மீண்டும் இல்லற நெறிக்கு வராத அளவுக்குத் தூய துறவற நெறியிலேயே நிற்கக் கூடியவர் ஆவர்.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357
ஒருவன் உள்ளமானது உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணருமாயின், பின்னர் இப்பிறப்பைப் பற்றி எண்ண வேண்டியதில்லை.
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358
பிறவி எண்ணும் அறியாமை நீங்க, சிறப்பு என்னும் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
சார்புஉணர்த்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய். 359
ஒருவன் தன்னைச் சாரக் கூடிய பொருள்களை அறிந்து அவற்றின் மேல் பற்றில்லாமல் நடப்பானாயின், அவனைச் சாரக் கூடிய துன்பங்கள் அவ்வறிவையும் ஒழுக்கத்தையும் கெடுத்துப் பின் சார மாட்டா.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 360
ஆசை, சினம், மயக்கவறிவு என்னும் இவை மூன்றினது பெயர் கெட்ட உடனே, துன்பங்கள் நீங்கும்.
No comments:
Post a Comment