January 2, 2020

குறிப்பு அறிவுறுத்தல்


குறிப்பு அறிவுறுத்தல்

கரப்பனும் கைஇகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு. 1271

நீ சொல்லாது மறைத்தாயாயினும், அதற்கு உடம்படாது உன்னை மீறி, உன் மையுண்ட கண்கள் எனக்குச் சொல்லுவதான செய்தி யயான்று இருக்கிறது. அதனை நீயே சொல்லுக.      

கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்கும்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.          1272

என் கண் நிறைந்த அழகையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடைய நின் தலைவிக்கு, பெண்பாலரிடத்து நிறைந்த மடமை மற்றவரைக் காட்டிலும் மிகுந்திருக்கின்றது.      

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.            1273

கோக்கப்பட்ட கண்ணாடி மணிகளுக்குள்ளே இருந்து புறத்தே தெரிகின்ற நூலைப் போல, உம் மடந்தையின் அழகுக்குள்ளே விளங்குவதாகிய ஒன்று உண்டு. அதை நான் அறியேன். நீ அறிந்து கூற வேண்டும் என்பது கருத்து.   
   
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு.    1274

மலர் முகைக்குள் உள்ள புறத்தே மணக்காத மணம் போல, நின் பேதையின் புன்முறுவலுக்குள் புறத்துத் தெரியாததோர் குறிப்பு உண்டு.  
    
செறிதொடி செய்துஇறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.   1275

நெருங்கிய வளையல்களை உடையாள் என்னிடம் இல்லாத தொன்றினை உட்கொண்டு, அதை என்னிடம் சொல்லாது மறைத்துப் போன குறிப்பு. எனது மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றினை உடையது. 
     
பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.      1276

காதலர் வந்து, தம் பிரிவினால் ஆகிய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும்படி கலக்கின்ற கலவி, மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினைக்குந் தன்மையை உடையது.     
  
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.      1277

குளிர்ந்த துறையை யுடையவன், மெய்யால் கூடியிருந்தே மனத்தால் பிரிந்தமையை, அவன் குறிப்பால் அறிதற்குரிய நம்மினும் இவ்வளையல்கள் முன்னே அறிந்தன.      

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.      1278

எமது காதலர் நேற்றுப் பிரிந்து போனார். ஆனால், அப்பிரிவுக்கு யாமும் மேனி பசப்புற்று ஏழு நாளுடையே மாயினோம்.  
    
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதுஆண்டு அவள்செய் தது.           1279

அவர் பிரிய நான் இங்கிருப்பின் இவை நில்லா என் வளையல் களைப் பார்த்து, அதற்கேதுவாக இவை மெலியுமெனத் தன் மெல்லிய தோள்கைளையும் பார்த்து, பின்பு, இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காக்க வேண்டுமெனத் தன் அடிகளையும் பார்த்து, அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன்போக்காயிருந்தது.      

பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.     1280

மகளிர் தன் காம நோயினைத் தோழியர்க்கும் வாயினால் சொல்லாது உடன்போதல் குறித்துக் கண்ணினால் தம் அடியினை நோக்கி இரத்தல், தமக்கியல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்தென்று சொல்லுவர் அறிந்தோர்.      

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...