January 2, 2020

புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு


புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

தமிழகத்தில்  ஈரோடு மாவட்டத்தில் ஓலவலசு என்றும் சிற்றூரில் முத்துசாமி (கவுண்டர்) - சின்னம்மையார் ஆகிய இணையருக்கு மகனாக 1.7.1906 இல் பிறந்தார் குழந்தைசாமி என்ற .மு. குழந்தை.

10 ஆம் அகவையிலேயே தாம் காதால் கேட்ட ஒப்பாரி, கொலைச்சிந்து போன்ற பாடல்கள் அமைப்பில் பாக்கள் பாடத் தொடங்கினார். காதில் கேட்ட இசை வடிவம் பாடலாக வெளிப்பட்டது.

தமது 15 ஆம் அகவையில் ஒன்பது அகவையுடைய முத்தம்மையாரை திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்.

குட்டப்பாளையம் பெரும்புலவர் பழனிவேல் அவர்கள் புலவர் குழந்தையிடம், நீங்கள் எப்படி இவ்வளவு இளம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றீர்கள் என்ற வினாவினார். உடனே குழந்தை அவர்கள் செய்யுள் நடையிலேயே விடை பகர்ந்தார்.

எல்லா வகை பாடல்கட்கும் இலக்கணமாகத் திகழும்யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்என்னும் இரு பெரும் நூல்கள் பாடினார் புலவர் குழந்தை அவர்கள்.

புலவர் குழந்தை அவர்கள் வெண்பா இயற்றுவதில் மிக்கப் புலமைப் பெற்றவர். ‘திருநணாச் சிலேடை வெண்பாஎன்னும் நூல் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

18 அகவையிலேயே தமது சொந்த ஊரான ஓலவலசு என்ற சிற்றூரில் உள்ளுர் பள்ளி ஆசிரியர் ஆனார். ஓலவலசுக்காரர்களுக்கு தமிழைக் கற்பித்தார்.
ஈரோடு இலண்டன் மி­ன் பயிற்சிப் பள்ளியில் எலிமண்டரி கிரேடு, லோயர் கிரேடு, ஹையர் கிரேடு ஆசிரியப் பயிற்சி பெற்றுப் பள்ளி ஆசிரியர் ஆனார். 1934 ஆம் ஆண்டு தம் 28 ஆம் அகவையில் திருவையாறில் புலவர் தேர்வெழுதித் தேர்ச்சிப் பெற்றார்.

சித்தோடு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய அவர் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் 21 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பவானி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

 இளமைப் பருவத்தில் பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925 இல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டபின் அவ்வியக்க பரப்புரையால் ஈர்க்கப்பட்டார். சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். பள்ளி பணி முடிந்தவுடன் வெள்ளை ஜிப்பாவின் மேல் கருப்பு சட்டையுடன் வெளியே செல்வார். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, வேட்டியிலும் மேலுக்குப் போடும் துண்டிலும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் இருக்கும்.

கடவுள் இல்லை என்ற கருத்தில் மிகத் தீவிரமாக இருந்தவர். 1930 ஆம் ஆண்டு, வெள்ளக்கோயிலை அடுத்த தீத்தாம்பளையத்தில் ஞானசூரியன் இதழ் ஆசிரியர் சுவாமி சிவானந்த சரசுவதி அவர்களுடன் நான்கு நாட்கள் கடவுள் இல்லை என்று சொற்போர் நடத்தினார்.

தீரன் சின்னமலை அவர்களின் வரலாற்றை புலவர் குழந்தை அவர்கள் எழுதினார்.

மறைமலையடிகள், சோமசுந்திர பாரதியார், திரு.வி. ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் புலவர் குழந்தை. புலவர் குழந்தை தொடங்கியதமிழோசைஇதழ் வெளியீட்டு விழாவில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களும் தமிழறிஞர் .ரா.போ. குருசாமி அவர்களும் கலந்து கொண்டனர். புலவர் குழந்தை அவர்கள் நடத்திய மற்றோர் இதழ்வேளாண்என்ற சமூக இதழாகும்.

இராவணனை பாட்டுடைத் தலைவராக கொண்டு இராவண காவியம் என்ற பெருங்காப்பியம் ஒன்றைப் புனைந்தார். அந்நூல் ஐந்து காண்டங்களும் 57 படலங்களும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் 1946 இல் வெளிவந்தது. காங்கிரசு அரசு அந்நூலைத் தடை செய்தது. 23 ஆண்டுகளுக்குப் பின் தடை நீக்கப்பட்டு 71 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பு வெளியானது.
 திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் அளவற்ற அன்பும் ஈடுபாடும் கொண்டவர் புலவர் குழந்தை அவர்கள். ஒன்று முதல் ஐந்தாம் வரை உள்ள மாணவர்களுக்காக தாம் எழுதிய நூலுக்குவள்ளுவர் வாசகம்என்று பெயர் வைத்தார். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக எழுதிய நூலுக்குவள்ளுவர் தமிழ் இலக்கணம்என்று பெயரிட்டார்.

திருக்குறள் மாநாடுகள் பலவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 1943 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிலும், 1949 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருக்குறள் மாநாட்டிலும் புலவர் குழந்தை அவர்கள் கலந்து கொண்டார்.

திருக்குறள் தமிழர் வாழ்வுக்குச் சட்ட நூல்; அஃது உலகப் பொது மறை. பண்டைத் தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குவது. திருக்குறள் எக்காலத்துக்கும் உரிய உயரிய நூல் என்பது அவர் கருத்தாகும். தம் கருத்துக்கு ஏற்பத் திருக்குறளுக்குப் புத்துரை மிக விரிவாக எழுதினார்.
கடவுள் வாழ்த்தை இறைநலம் என்றார். மக்களுக்கெல்லாம் முதலாக இருப்பவன் முதல்வன் தலைவன். அவனே இறை என்றார்.

திருக்குறளுக்கு புலவர் குழந்தை எழுதிய உரை சிறப்பான ஒன்றாகும்.
நன்னூல் போல் இலக்கண நூலாகஇன்னூல்என்ற நூலை இயற்றினார். தமிழரின் காதல், வீர நிகழ்வுகளைக் கூறும் தொல்காப்பியப் பொருளா திகாரத்திற்கு விரிவான உரை எழுதினார்.

சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம் இவற்றை ஆதரித்தார். தம் இரு பெண் மக்களுக்கும் சமரசம், சமத்துவம் என்று பெயர் வைத்தார்.
ஓயாமல் தமிழ்ப்பணி செய்த புலவர் குழந்தை அவர்கள் 24.9.72 இல் இறந்தார்.   

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...