January 2, 2020

ஊடல் உவகை

ஊடல் உவகை

இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.            1321

அவரிடத்திலே தவறில்லையாயினும், நமக்கு அவர் செய்கின்ற தலையளியே அவரோடு ஊடுதலை உண்டாக்க வல்லதாகின்றது.  
    
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். 1322

ஊடல் காரணமாக நம்மிடம் உண்டாகின்ற சிறிய வெறுப்பி னால், காதலர் செய்யும் நல்ல தலையளி கொஞ்சம் குறையினும் பின்பு  பெருமை தரும்
     
புலத்தலின் புத்தேளிநாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந்து அன்னார் அகத்து.         1323

நிலத்தோடு நீர் கலந்தாற் போல ஒற்றுமையுடைய காதலரிடம் புலத்தைக் காட்டினாலும், வானுலகில் இன்பம் உண்டோ? இல்லை.     
  
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.      1324

காதலரைத் தழுவிக் கொண்டு பின் விடாமைக்குக் காரணமான அப்புலவியில் என் உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் உண்டாகும்.  
    
தவறுஇலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து.            1325

ஆடவர் தம்மிடம் தவறிலராயினும், தவறுடையார் போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூட பொறாத போதும், அவர்க்கு அத்தன்மையதோர் இன்பம் பயத்துடையது.      

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.    1326

மேலும் உண்பதைக் காட்டிலும் முன்னுண்ட உணவு அறுதல் இன்பம் தரும். அதுபோலக் காமத்திற்கு மேலும் புணர்தலைக் காட்டிலும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பந்தரும்.    
  
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும். 1327

காம நுகர்தற்குரிய இருவருள், ஊடலில் தோல்வியுற்றாரே வென்றவராவார். அவ்வெற்றி அப்போது அறியப்படாதாயினும் பின் புணர்ச்சியின் போது அவரால் அறியப்படும்
      
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.       1328

இவள் நெற்றி வியர்க்கும் வகை இவளுடன் கூடி இப்பொழுது பெற்ற இன்பத்தை, இன்னுமொருதரம் இவள் ஊடி நாம் பெறக் கூடுமோ?    
   
ஊடுக மன்னோ ஒளிஇழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.       1329

ஒளி பொருந்திய அணிகளை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக. அங்ஙனம் அவள் கூடி நிற்பதற்கும், அவ்வூடலை உணர்த்துவதற் பொருட்டு யாம் இரந்து நிற்பதற்கும் நேரம் பெறும் வகை இவ்விரவு விடியாது நீடுவதாகுக.      

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின். 1330

காம நுகர்ச்சிக்கு இன்பமாவது காதலர் தம்முள் ஊடுதல். அவ்வூடுதலுக்க இன்பமாவது அவ்வூடலை அளவறிந்து நீங்கித் தம்முன் கூடி முயங்குதல் கூடுமாயின் அம்முயக்கம்.     

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...