புணர்ச்சி விதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. 1281
நினைத்த அளவில் களிப்புறுதலும் கண்ட அளவில் மகிழ்வெய்த லும் கள்ளுக்கு இல்லை, காமத்திற்கு உண்டு.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். 1282
மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிகுதியாக உண்டாயின், தங் காதலரோடு திணையளவும் ஊடாமல் இருக்க வேண்டும். ஊடின் வருத்தமிகுமெனப் பிறர்க்க உறுதி கூறுவாள் போலத் தன் விதுப்புக் கூறியது.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண். 1283
நம்மை விரும்பாது தம் மனம் விரும்பியனவே செய்வாரா யினும் அக்கணவனைக் காணாமல் என் கண்கள் அமைகின்றன இல்லை.
ஊடற்கண் சென்றேன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. 1284
தோழீ! காதலரைக் காணாதபோது அவர் செய்தவற்றை நெஞ்சொடும் ஆராய்ந்து ஊடுதற்கண்ணே சென்றேன். கண்டவுடன் என் நெஞ்சு அவ்வூடலை மறந்து அவரோடு கூடுதற்கண்ணே சென்றது.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. 1285
முன்பெல்லாம் கண்டிருந்தும் மையயழுதுங் காலத்துக் கோலைக் காண மாட்டாத கண்களைப் போல, கணவன் தவற்றை, அவனைக் காணாத விடத்தெல்லாம் கண்டிருந்தும் அவனைக் கண்டவிடத்துக் காண மாட்டேன். என்னியல்பு இதுவாகலின் இதுவாகலின் ஊட முடியா தென்பதாம்.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. 1286
கணவனை யான் காணும்போது அவனிடம் தவறாயவற்றைக் காண்கின்றிலேன். அவனைக் காணாத பொழுது தவறல்லாத பிறவற்றைக் காண்கின்றிலேன். நான் முன் சொல்லிய தவறுகள் இப்போது காணாமையின் புலந்திலேனென்பதாம்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்துஎன் புலந்து. 1287
தம்மை இழுத்துக் கொண்டு போவதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரில் பாய்கின்றவரைப் போல, புலத்தல் பொய்படுவதை அறிந்தும் புலந்து பயனென்ன?
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்அற்றே கள்வநின் மார்பு. 1288
வஞ்சகா! எங்கட்கு நின் மார்பு, தன்னைக் கண்டு களித்தார்க்கு இளித்தக்க துன்பந் தருவனவற்றைச் செய்தாலும் அவரால் மேன்மேல் விரும்பப்படும் கள்ளே போலும்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். 1289
காமவின்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும். அங்ஙனம் மெல்லியதாதலை அறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலராவர்.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப்பு உற்று. 1290
என் காதலி, முன்னொரு நாள் புல்லல் விதுப்பினால் சென்ற என்னோடு தன் கண்ணால் மட்டும் ஊடி, புணர்தலை என்னைப் பார்க்கிலும் தான் விரைதலால் அவ்வூடலையும் அப்பொழுதே மறந்து கூடி விட்டாள்.
No comments:
Post a Comment