January 2, 2020

நெஞ்சொடு புலத்தல்

நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.         1291

நெஞ்சே! நம் காதலருடைய நெஞ்சம் நம்மை நினையாது அவருக்காக நிற்பதைக் கண்டும், நீ எமக்காக நிற்காமல் அவரை நினைப்பது யாது கருதி?  
   
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறஅர்எனச் சேறிஎன் நெஞ்சு.        1292

என் நெஞ்சே! நம்மிடம் அன்புறாதவரை உள்ளவாறறிந்த விடத்தும், நாம் சென்றால் வெகுளார் என்று நினைத்து அவரிடம் சேர்க்கின்றாய். இதைக் காட்டிலும் ஓர் அறியாமை உண்டோ? பழமை பற்றி வெகுளாரென்று நீ கருதிய தவறு என்பதாம்.       

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.         1293

நெஞ்சே! என்னிடம் நில்லாமல் நீ விரும்பியவாறே அவரிடம் செல்லுதற்குக் காரணம், கெட்டார்க்க நண்பர் உலகத்தில் இல்லை யயன்னும் நினைவோ? உன் இயல்போ, சொல்?       
 
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294

நெஞ்சே! நீ அவரைக் கண்டதும் அவர் தவறு நோக்கி முன் புலந்து, அதனை அளவறிந்து பின் நுகரக் கருத மாட்டாய். இனி அப்படிப் பட்டவைகளை நின்னுடன் எண்ணுபவர் யார்?       

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு.    1295

காதலரைப் பெறாத போது புணர்ச்சி இல்லையே என்று அஞ்சி நிற்கும், பெற்றால் பிரிவாரோ என்று அஞ்சி நிற்கும். ஆகையால், என் நெஞ்சம் இடையறாத துன்பத்தை உடையது.       

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு. 1296

என் நெஞ்சு காதலரைப் பிரிந்து இங்கிருப்பது, காதலரைப் பிரிந்து தனியாக இருந்து அவர் கொடுமைகளை யான் இதனொடு நினைத்தால், என்னைத் தின்பது போலத் துன்பம் செய்வதற்கே.       

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு.     1297

என்னை மறந்த காதலரைத் தான் மறக்க மாட்டாத மாட்சிமையும் அறிவுமில்லாத என் நெஞ்சுடன் கூடி, என் உயிரினும் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன்.        

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.        1298

உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு, நம்மை இகழ்ந்து சென்றாரென்று நாமும் இகழ்வோமாயின் பின் நமக்கு இழிவாகு மென்று எண்ணி, அவர் திறத்தையே நினைக்கின்றது.       

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய
நெஞ்சம் துணைஅல் வழி.      1299

ஒருவர்க்குத் துன்பம் வந்த போது அது நீக்குதற்கு, தம்முடைய நெஞ்சம் தமக்குத் துணையாகாவிடத்து, வேறு துணையாவார் யார்?ஒருவருமில்லை.       

தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
நெஞ்சம் தமர்அல் வழி.           1300

தம்முடைய நெஞ்சம் தமக்கு உறவல்லாதவிடத்து, அயலார் உறவல்லாதார் ஆகுதல் எளிதன்றோ?        

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...