புலவி நுணுக்கம்
பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. 1311
பரத்தமை யுடையவனே! நின்னைப் பெண்ணியல்பை உடைய எல்லோரும் தங்கண்களால் பொதுவாக நுகர்வர். ஆகையால், அவர் மிச்சிலாகிய நின்பார்பினை நான் தீண்டேன்.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து. 1312
யாம் தம்மோடு ஊடி உரையாடாது இருக்கக் காதலர் தும்மினார். அவ்வூடல் நீங்கி யாம் அவரை “நீடு வாழ்க” என்று உரையாடுவோம் எனக் கருதி வேண்டுமென்றே தும்மினார்.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. 1313
இம்மருத நிலத்துப் பூ அல்லாத பிற நிலங்களில் மரக்கிளை களிலுள்ள பூவை யான் சூடினாலும் நும்மால் காதலிக்கப்பட்ட இவ்விடத்திலுள்ள ஒருத்திக்கு இவ்வேற்றுப்பூ வணியைக் காட்டு வதற்காக அணிந்தீர் என்று வெகுளுவாள்.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. 1314
காதலுடையார் யாரினும் யாம் மிக்க காதலையுடையோம் என்னும் கருத்தால் யான், “யாரினும் காதலம்” என்றேனாக, நின் தோழி அதனை, “என் காதலியர் பலருள்ளும் பலருள்ளும் நின்னி டத்துக் காதலு டையேன்” என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என் மீது காதலுடையீர் என்று ஊடினாள்.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண்ட னள். 1315
காதல் மிகுதியால் “இப்பிறப்பில் யாம் பிரியேம் என்று சொன்னேனாக, மறுமையில் பிரிவேன்” என்னும் குறிப்பினேனானக் கருதி, அவள் தன் கண்ணிறைந்த நீர் கொண்டாள். கண் கலங்கினாள்.
உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றுஎன்னைப்
புல்லாள் புலத்தக் கனள். 1316
பிரிந்த காலத்து உன்னை இடையிடையே நினைத்தேன் என்னும் கருத்தால், யான் “உள்ளினேன்” என்று கூறினேன். அதனை, மறந்தி ருந்தால் தானே பின் நினைப்பது கூடும் என்று கருதி, என்னை மறந்து விட்டீர் என்று சொல்லி, முன் தழுவுதற்கிருந்தவள் அதை விட்டு ஊடலானாள்.
வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று. 1317
என்னுடன் கூடியிருந்தவள், யான் தும்மினேனாக வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்திய தானே மீண்டும், நும்மை நினைத்து வருந்து கின்ற மகளிருள் யார் நினைத்ததால் தும்மினீர் என்று சொல்லிப் புலந்து அழுதாள்.
தும்முச் செறுப்ப வாழ்அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று. 1318
எனக்குத் தும்மல் தோன்றிய போது, தும்மினால் யாருள்ளித் தும்மினீர் என்று புலத்தலை அஞ்சி, அத்தும்மலை அடக்கினேன். உம்முடைய காதல் மகளிர் உம்மை நினைத்தலை எம்மிடம் மறைக்கின்றீரோ என்று சொல்லி புலந்தழுதாள்.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. 1319
இவ்வாறு ஊடிய தன்னை யான் பணிந்து வேண்டினாலும், பிற மகளிர்க்கும் அவரூடிய போது நீர் இவ்வாறுதானே பணிந்து உணர்த்தும் தன்மையை உடையராகுவீர் என்று சொல்லி வெகுளுவாள்.
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யார்உள்ளி நோக்கினீர் என்று. 1320
என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுளுதலான், அவற்றை ஒழிந்திருந்து, அவள் உறுப்புகளின் ஒப்பற்ற அழகை நோக்கிக் கொண்டிருப்பினும், என்னுறுப்புகளனைத்தையும் நீர் நோக்கினீர். அவற்றதொப்புமையால் எம் மகளிரை நினைந்து என்று சொல்லி என்னை வெகுளுவாள்.
No comments:
Post a Comment