January 2, 2020

புலவி


புலவி

புல்லாது இராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.       1301

புலந்தால் காதலர் அடையும் துன்ப நோயை நாம் சிறிது காண்போம். நீ அவரைத் தழுவாமல் இருந்து பிணங்குவாயாக.   
    
உப்புஅமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.           1302

புணர்ச்சியின்பத்திற்கமைந்த புலவியின் அளவு, உண்பனவற்றை இன்சுவை தருதற்கமைந்த உப்பின் அளவு போன்றது. அப்பிணக்கைச் சிறிது நீட்டித்தல் அவ்வுப்பின் அளவு மிகுத்தாற் போலும்.    
   
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.  1303

தம்மை ஏற்றுக் கொள்ளாது புலந்த மகளிரை அப்புலவி நீக்கித் தழுவாது விடுதல், துன்பமுற்று வருந்தினவர்க்குப் பின்னுந் துன்ப நோய் செய்தாற் போலும்.      
  
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல்அரிந் தற்று.        1304

தம்மோடு ஊடிய மகளிரை ஊடல் தீர்த்துக் கூடாதிருத்தல், நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும்.  
      
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.   1305

நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கு அழகாவது, தம்முடைய பூப்போலும் கண்ணார் நெஞ்சில் நிகழும் புலவியே யாகும்.  
     
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.   1306

முதிர்ந்த மன வேறுபாடாகிய துனியும், முதிராத (இளைய) மன வேறு பாடாகிய புலவியும் இல்லையாயின், காமமானது மிக முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.       

ஊடலின் உண்டுஆங்குஓர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் என்று. 1307

இப்புணர்ச்சி நீட்டிக்குமோ, நீட்டியதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலினிடத்தும் ஒரு துன்பம் உண்டு.    
   
நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி.    1308

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ்வருத்தத்தை உணரும் அன்புடைய காதலரை இல்லாவிடத்து, ஒருவர் வருந்துவதானால் பயனென்ன?  
      
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.         1309

உயிர் வாழ்வுக்கின்றியமையாத நீரும் நிழலினிடத் துள்ளதாயின் இனிதாகும். அது போலக் கலவிக்கின்றியமையாத புலவியும் அன்புடையாரிடத்துள்ளதா யின் இனிதாகும். 
       
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவோம் என்பது அவா.       1310

ஊடலினால் தான் மெலியும்படி, விட்டிருப்பாரோடு கூடுவே மென்று நினைப்பது என் நெஞ்சத்தினது அவாவே. வேறில்லை. 'தான்' என்றது நெஞ்சத்தை.        

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...